உறுபசி
by விமலா
மண்ணையடையும்
பழுத்த மஞ்சளடர்ந்த
இலையின்
சாத்தியத்திற்குப்பட்டதில்லை
நாட்காட்டி களைந்தெறியும்
நாட்கள்
தீராப்பசியுடன் தவிக்கும்
அட்சயப்பாத்திரம் ஒன்றை
கையிலேந்தி
தின்று மென்று விழுங்கி
போதாமல் விழையும்
இரவிலும் விழித்திருக்கும்
காடு
நீர்த்திவலைகள் முகத்திலறையும்
அருவியின்
நீண்ட கரையோரங்களில்
செழிந்திருக்கும் புதர்களினுடே
அடையாளமற்று சொரிந்திருக்கும்
பூக்கள்
நெளியும் புழுக்களின்
சாயலை ஒத்த
வார்த்தைகளைக் கொண்டு
இதை வடித்து
கொண்டிருப்பவனின் கையில்
உறைத்திருக்ககூடும்
உறுபசி