வலியுணர்தல்

வீடு திரும்பும் பின்னிரவில்
வீதியங்கும்
வெப்பம் வன்கலவிய
காற்றின் துளிகள்

உரக்க உரையாடிக் கனத்த
இடைவெளிகளை
அருவருக்கத்தக்க மெளனங்களால்
நிரப்பிவிட்டிருந்தோம்

பற்கடிப்போ விசும்பலோ
தன்னிலை விளக்கமோ
ஒன்றிரண்டு கண்ணீர்துளிகளோ
 இதில்     ஏதாவது ஒன்றோ
சொல்லி விடுமா என்
வலியை எவருக்கும்

பாதையின் இருமருங்கிலும்
யாருமற்ற நிற்கும்
ஒற்றைப் பனைமரங்கள்
தலைபறக்க...

பிரித்துயர்

நெடிந்துயர்ந்த மரங்கள் சூழ் வனாந்தரத்தின்
ஒற்றையடி பாதையில்
பிரக்ஞையற்று ஊரும் பாம்பென
கடக்கவியலா இரவுகள்

கூந்தலில் அலைவுறும் உன்
விரல்களின் முடிவில்
மலர்ந்து கிடக்கும் பூக்காடு
முகிழ்ந்திருக்கும் என்
அறையெங்கும்

உதிரம் சொட்டும் கூரிய
பற்களையுடைய ஓநாயின்
வேகம் கொண்டு துரத்தும் தனிமை
போராடி களைத்த இரவின்
விதிகளில் விழி முடியுறங்கும்
குருவிகள்

உறையிலிருந்து பிரிக்கப்பட்டும்
புழங்கப்படாமலே கழியட்டும்
என் நாட்கள்!

Blogger Templates by Blog Forum