சிவசக்தி

சக்தியின் மீதேறி ஆடும்
சிவனின் கால்கள்
இறங்குவதேயில்லை
ஒருபோதும்


வலிந்து துடைத்தெறியும்
சக்தியின் கண்ணீர்
பெரும் ஆறாகி வழிகிறது
அவள் உடலெங்கும்


தன்இருப்பை விட்டு விலகிட
கால் கடுக்க
தவமிருக்கிறாள் சக்தி
பன்னெடுங்காலமாக...

என் முதல் கவிதை

ஒரு நடுநிசியில் எதிர்பார்த்திராத
ஒரு பொழுதில்
உயிர் பெற்று உருக்கொண்டது

அடிநெஞ்சில் கணன்று கொண்டிருக்கும்
சூட்டில் வைத்து பாதுகாத்தேன்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்
முளைக்க வளர்தெடுத்தேன்

அதற்கான நாளை அதுவே
குறித்துக் கொண்டது

கவனமாய் காத்திருந்தேன்
வெயில் தின்று கருத்த ஒரு
மாலை வேளையில்
பெற்றேடுத்தேன்

என் முதல் கவிதையை

சில கண்ணீர்துளிகளோடும்
சில புன்சிரிப்போடும்
என் குளக்கரையில் அமர்ந்துகொண்டு கல்லெறிவதை
தயவுசெய்து நிறுத்திவிடு

சலனங்களை மறைத்துகொண்டு
நெளிந்து சுளித்து ஓடுவதற்கு
நானொன்றும் காட்டாறல்ல
தேங்கிக் கிடக்கும் குளம் நான்

சலனங்கள் என்னுள் படர்ந்து
கரைவதை வெறுமனே
பார்த்து கொண்டிருக்கும் குளம் நான்

என் குளக்கரையில் அமர்ந்துகொண்டு கல்லெறிவதை
தயவுசெய்து நிறுத்திவிடு
அவனின் எல்லா பிரயத்தனங்களுக்கு பின்னும்
ஒளிந்திருக்கிறது
ருசி கண்ட ஒரு மிருகத்தின் குரூரம்

அவள் பூர்த்தி செய்யும் எல்லா தேவைகளுக்கு
பின்னும் பதுங்கியிருக்கிறது
வெறிகொண்ட ஒரு செந்நாயின் தந்திரம்

பளிச்சென்று பல்லிளித்து
கொண்டிருக்கிறது
நிரம்பி வழியும் காமப்பாத்திரம்

அவன்

வெகுதூரம் பயணித்திருந்தான் அவன்
இளைப்பாற கிடைத்தது
ஒரு மரத்தடி

உறக்கம் கலைந்து கண்விழிக்கையில்
கட்டப்பட்டிருந்தது அவனின்
கைகளும் கால்களும்

அம்மரத்தின் பழங்களே அவன்
உணவாயின

அம்மரத்தின் இலைகளையே
உடுத்திக் கொண்டான் அவன்

அதன் நீட்சியே
அவனின் காலமுமானது

இறுதியில் அம்மரமே
அவனுடைய பயணமாயிற்று

Blogger Templates by Blog Forum