துயர் கொண்டலையும் வார்த்தைகள்

முன்னேற்பாடிலில்லாத ஒரு பொழுதில்
இரைந்து விட்டுச் சென்ற
வலிமிகுந்த சொற்களை
துடைத்தெறிகிறேன்
என்னிலிருந்து முற்றிலுமாக

மென்று விழுங்கிய பின்னும்
நாவிற்கடியில்
தேங்கி நிற்கிறது
காடியில் தோய்த்த
ஒன்றிரண்டு ...

கடும்பாலையன உறைந்துவிட்ட
அக்கணத்திலிருந்து
கையூன்றி கடக்கையில்
பிசுபிசுக்கிறது
மிதித்து நசுக்கிய
மனத்தின் ரணம்

அகந்தை கொண்டலைந்த
ஒரு பறவையின் அலகுகளுக்கு
தின்னக் கொடுத்துவிட்டதுபோக
எஞ்சியிருந்தது
உயிரற்றவை ஒன்றிரண்டு...

இதயத்தின் மிக அருகில்
நின்று விசும்பிக் கொண்டிருக்கிறது
ஏனென்று கேட்கபடாத
வலியொன்று...

1 comments:

    கவிதை எழுதப்படும் மனங்கள் மிக நுட்பமானதும் மென்மையானதும் மிக மிக கூர்மையான அவதானிப்பும் கொண்டதென்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்..

    நல்ல கவிதை

     

Blogger Templates by Blog Forum