காலியாகிப் போன
மதுகோப்பையில்
நிரம்பிவிட்டிருந்தது
நிறமில்லாதொரு
வெற்றிடம்

வரவழைக்கப்பட்ட உற்சாகம்
வடிந்து போய்
வெகுநேரமாகி போயிருந்த
ஒர் இரவில்
ஆயத்தமில்லாமல் உயிர்பெற்று
கொண்டது நாளையற்ற
ஒன்றை குறித்ததென்
தீவிரம்

வரிசைப்படுத்தப்பட்ட
புட்டிகளில்
நிரம்பிகிடக்கிறது
பலவிதங்களாய் ரசம்

கோப்பையினுள்
நிரப்புவதும் பின்
காலிசெய்வதுமென
தள்ளாடியபடியே
வந்தடைகின்றன
பெருவாசலை கால்கள் .....

துயர் கொண்டலையும் வார்த்தைகள்

முன்னேற்பாடிலில்லாத ஒரு பொழுதில்
இரைந்து விட்டுச் சென்ற
வலிமிகுந்த சொற்களை
துடைத்தெறிகிறேன்
என்னிலிருந்து முற்றிலுமாக

மென்று விழுங்கிய பின்னும்
நாவிற்கடியில்
தேங்கி நிற்கிறது
காடியில் தோய்த்த
ஒன்றிரண்டு ...

கடும்பாலையன உறைந்துவிட்ட
அக்கணத்திலிருந்து
கையூன்றி கடக்கையில்
பிசுபிசுக்கிறது
மிதித்து நசுக்கிய
மனத்தின் ரணம்

அகந்தை கொண்டலைந்த
ஒரு பறவையின் அலகுகளுக்கு
தின்னக் கொடுத்துவிட்டதுபோக
எஞ்சியிருந்தது
உயிரற்றவை ஒன்றிரண்டு...

இதயத்தின் மிக அருகில்
நின்று விசும்பிக் கொண்டிருக்கிறது
ஏனென்று கேட்கபடாத
வலியொன்று...

கண்ணீரின் குரல்

அந்தரத்தில் தாவும் கால்கள்
உணர்ந்திருக்குமா
வாழ்விற்கும் சாவிற்குமான
இடைவெளியின் தூரத்தை..


இருத்தலின் பசி இழுத்துச்
செல்கிறது எவரையும் ஏதோவொரு
விளிம்பின் எல்லைவரை ......


சிரித்து கொண்டிருக்கும் முகத்திற்கு
பின்னால் மறைந்திருக்கக்கூடும்
இது வரமா சாபமா
என்றதொரு முடிவில்லா கேள்வி...


யார் கேட்டிருப்பார்
அழுகின்ற கண்ணீரின்
குரலை.....

Blogger Templates by Blog Forum