பிரித்துயர்

நெடிந்துயர்ந்த மரங்கள் சூழ் வனாந்தரத்தின்
ஒற்றையடி பாதையில்
பிரக்ஞையற்று ஊரும் பாம்பென
கடக்கவியலா இரவுகள்

கூந்தலில் அலைவுறும் உன்
விரல்களின் முடிவில்
மலர்ந்து கிடக்கும் பூக்காடு
முகிழ்ந்திருக்கும் என்
அறையெங்கும்

உதிரம் சொட்டும் கூரிய
பற்களையுடைய ஓநாயின்
வேகம் கொண்டு துரத்தும் தனிமை
போராடி களைத்த இரவின்
விதிகளில் விழி முடியுறங்கும்
குருவிகள்

உறையிலிருந்து பிரிக்கப்பட்டும்
புழங்கப்படாமலே கழியட்டும்
என் நாட்கள்!

Blogger Templates by Blog Forum